கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி - அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழப்பு.


தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரரைச் சேர்ந்தவர் ஐசக்தவராஜ் (55) இவர் கயத்தாறு அருகே உள்ள கே.கைலாசபுரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலையில் வழக்கம் போல தன்னுடைய பைக்கில் பள்ளிக்கு சென்றுள்ளார். மெய்தலைவன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, வில்லிசேரியில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்ற வானரமூட்டியில் செயல்பட்டு வரும் ஆச்சாரியா என்ற தனியார் பள்ளி வாகனம் ஐசக்தவராஜ் பைக் மீது மோதியது. இதில் ஆசிரியர் ஐசக்தவராஜ் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.