கோவில்பட்டியில் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் 26 லட்சம் ரூபாய் பணம் திருட்டு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மதுசாலியபுரம் 1வது தெரு பகுதியை சேர்ந்த முகம்மது காசிம் என்பவரது மகன் முகம்மது சையது சுலைமான் (50). இவர் இறைச்சி கடை வைத்திருக்கிறார். மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இவருக்கு அந்த தெருவில் பழைய மற்றும் புதிய வீடு என எதிரெதிர் என 2 வீடுகள் உள்ளது. நேற்றிரவு முகம்மது சையது சுலைமான் புதிய வீட்டில் சாப்பிட்டு விட்டு எதிரே உள்ள பழைய வீட்டில் குடும்பத்தினருடன் நேற்றிரவு இரவு தூங்கியள்ளார். இந்நிலையில் இன்று காலையில் எழுந்து முகம்மது சையது சுலைமான் புதிய வீட்டிற்கு சென்ற போது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து முகம்மது சையது சுலைமான் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் களைந்து கிடந்தது மட்டுமின்றி சுமார் 50 பவுன் நகை மற்றும் ரூ.26 லட்சம் பணம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முகம்மது சையது சுலைமான் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். கோவில்பட்டி டி.எஸ்.பி ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகுந்த இடத்தில் நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.