கோவில்பட்டியில் மாயமான 5-ம் வகுப்பு சிறுவன் சடலமாக கண்டெடுப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திக் முருகன். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பால சுந்தரி தீப்பெட்டி ஆலையில் பணியாற்றி வருகிறார். இத்தம்பதியினருக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற 2 மகன்கள் உள்ள நிலையில், மணிகண்டன் கோவில்பட்டியில் உள்ள நகராட்சி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் கருப்பசாமி 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சிறுவன் கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று பள்ளிக்கு செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. நேற்று காலையில் பெற்றோர்கள் கார்த்திக் முருகன் மற்றும் பால் சுந்தரி வழக்கம்போல வேலைக்கு சென்ற நிலையில், சிறுவன் கருப்பசாமியின் சகோதரன் மணிகண்டனும் பள்ளிக்குச் சென்று விட்ட போது கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து மதியம் வீட்டிற்கு வந்த பாலசுந்தரி, உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்த தனது மகனை காணாமல் அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது வீட்டில் டிவி மட்டும் ஓடிக்கொண்டிருந்தது, சிறுவன் கழுத்தில் 1.5 பவுன் செயினும், கையில் ஒரு கிராம் மோதிரமும் அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது.
பாலசுந்தரி உடனடியாக அவரது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் விரைந்து வந்த நிலையில் தம்பதியினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை என்பதால் இதுகுறித்து கோவில்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து சிறுவனை தேடியபோதிலும் சிறுவன் கிடைக்கவில்லை... இந்த நிலையில் இன்று(10.12.2024) காலை சிறுவன் கருப்பசாமி பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் மூச்சு பேச்சின்றி கிடைப்பதைக் கண்டு அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது விட்டதாக மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் போன சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர்... இச்சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.....