கோவில்பட்டியில் மிட்டாய் கடைக்குள் புகுந்த கார் : 16 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தங்களது வீட்டில் உள்ள காரில் இன்று தனது தாயாரை கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது காரை ஓட்டி வந்த சிறுவன் மாதாக்கோவில் சாலை வளைவு பகுதியில் அதிவேகமாக வந்ததில் அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியதோடு மட்டுமின்றி கார் அருகில் இருந்த மிட்டாய் கடைகள் புகுந்து அங்கிருந்த பொருட்களை நாசம் செய்து, அங்கிருந்த கம்பியின் மீது மோதி நின்றுள்ளது. 16 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் ஏற்படுத்திய இந்த விபத்தில் பைக்கில் வந்து கொண்டிருந்த முன்னாள் நகராட்சி ஊழியர் கணேஷ் என்பவர் காயமடைந்தார். மேலும் மிட்டாய் கடையின் முன் முகப்பு பகுதி மற்றும் கடையில் இருந்த தின்பண்டங்கள், பொருட்கள் என அனைத்தும் சேதமடைந்தன.
மேலும், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. 16 வயது சிறுவன் காரை ஓட்டி வந்து கோவில்பட்டி நகரில் விபத்து ஏற்படுத்தியது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.