கோவில்பட்டியில் நகையை திருடி விட்டு குஜராத் வரை போலீசார் அலையவிட்டு டிமிக்கி கொடுத்த 3 பேர் கைது - 16பவுன் நகை பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். கடந்தாண்டு அக்டோபர் மாதம் 18ந்தேதி (18.10.24) சுந்தர் குடும்பத்தினர் வெளியே சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து பார்க்க போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த சுமார் 16 பவுன் நகை திருடு போயிருந்தது. இதுகுறித்து சுந்தர் மனைவி அருள் சாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கூசாலிபட்டி மேட்டு தெருவை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரது மகன் வானு பாபு என்ற பாபு (34), திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது
உதவி ஆய்வாளர் சண்முகம் காவலர்கள் கழுகாசல மூர்த்தி,ரமேஷ்,கார்த்திக் ஆகியோர் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் தேடி வருவதை அறிந்த வானுபாபு மாவட்ட விட்டு மாவட்டம், மாநில விட்டு மாநிலம் என மாறி மாறி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து இறுதியில் குஜராத்தில் இருந்தது தெரியவந்தது. போலீஸ் யாரும் விடாமல் துரத்தி குஜராத் வரை சென்றதும், இதனை மோப்பம் பிடித்த வானுபாபு அங்கிருந்து எஸ்கேப் ஆகி நெல்லை மாவட்டம் களக்காட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று கோழியை அமுக்குவது போல வேனுபாபுவை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். மேலும் வானுபாபு திருட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக களக்காடு கக்கன் நகர் மேல தெருவை சேர்ந்த இந்திரா (49), அதே பகுதியில் வசித்து வரும் சேரன்மாதேவியை சேர்ந்த சுரேந்தர் மனைவி சகிதா ஆகியோரையும் போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.