ராமநாதபுரம்
மாவட்டம் சாயல்குடியில் நாகுபாண்டி சேர்வைக்காரர் நினைவு நாளை முன்னிட்டு, நாகுபாண்டி சேவைக்காரர் சிலம்ப குழு மற்றும்
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு அமைச்சகம், ராமநாதபுரம்
மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.
இந்த சிலம்பப்போட்டியில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, புதுக்கோட்டை, விருதுநகர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு சிலம்பங்களை சிறப்பாக சுற்றி அசத்தி காட்டினர். குறிப்பாக 5 வயது சிறார் முதல் 16 வயது வரையிலான மாணவ,மாணவிகள் சிலம்ப போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய சிலம்பப் போட்டி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த மாபெரும் சிலம்பப் போட்டியை பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தொடங்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் சிறுவர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் நினைவுப் பரிசு சுழல் கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன், சாயல்குடி தெற்கு ஒன்றிய பாஜக கழகத் தலைவர் ராஜசேகர பாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.