கமுதி புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சமத்துவக் கிடாய்க்கறி விருந்து!


இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள பழமையான புனித அந்தோணியார் ஆலய வருடாந்திரப் பெருவிழாவானது கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இத்திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு திருப்பலியும், நற்கருணை செப மாலையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை கொடியிறக்கம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மாலையில் திருப்பலி செபமாலையும், அதன்பின் கமுதி மற்றும் வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் மத, சமூக ஒற்றுமையுடன் அந்தோணியார் ஆலயத்திற்கு காணிக்கையாக வழங்கிய கிடாய்களை பலியிட்டு இரவு முழுவதும் மாபெரும் கிடாய்க்கறி விருந்து அனைத்து மதம் மற்றும் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கும் சமத்துவ விருந்து தடபுடலாக நடைபெற்றது. இரவு முழுவதும் நடைபெற்ற இந்த அசைவ விருந்தில் ஏராளமான பொதுமக்கள் ஜாதி, மத பேதமின்றி சமமாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.