விளாத்திகுளம் அருகே அரசு பள்ளியின் பூட்டை உடைத்து லேப்டாப்கள் மற்றும் LED டி.வி. என 1 லச்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு!  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வெம்பூரில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இயங்கி வரும் இப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல நேற்றைய தினம் (28.11.2023) மாலை பள்ளி முடிந்தபின் பள்ளியை பூட்டி விட்டு சென்ற ஆசிரியர்கள் இன்று காலை பள்ளிக்கு வந்து பார்த்தபோது தலைமை ஆசிரியர் அறை, கணினி அறை மற்றும் 2 வகுப்பறைகள் என 4 அறைகளின் பூட்டுகள்  உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்ததுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா சண்முகநாதனிடம், பள்ளியின் அறைகள் திறந்து கிடப்பது பற்றி தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கு சென்ற தலைமை ஆசிரியர் ராஜா சண்முகநாதன் உள்ளே சென்று பார்த்ததில், பள்ளியின் கணினி அறையில் இருந்த 2 லேப்டாப்கள் மற்றும் LED டி.வி. ஒன்றையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றதோடு, அங்கு மாணவர்களின் சான்றிதழ்கள், பதிவேடுகள் வைக்கப்பட்டிருந்த பீரோகளையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜா சண்முகநாதன் பள்ளியில் நடந்த திருட்டு தொடர்பாக  மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரியின் அடிப்படையில் மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் பள்ளிக்கு சென்று திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து, பள்ளியில் உள்ள சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள  பொருள்கள் திருடிய   திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.  மேலும், இதே பள்ளியில் கடந்த 2012-ஆம் ஆண்டு கணினிகள் மற்றும் இருக்கைகள் திருடுபோனதும் குறிப்பிடத்தக்கது. பள்ளியில் லேப்டாப் மற்றும் LED டிவி திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.