விளாத்திகுளம் அருகே கடல்வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 540 கிலோ கஞ்சா பறிமுதல் - 2 பேர் கைது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலமாக அதிகளவிலான கஞ்சா கடத்தப்படவிருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீசார் மற்றும் வேம்பார் கடலோர காவல் நிலைய போலீசார் பெரியசாமிபுரம் கிராமத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வேகமாக சென்று கொண்டிருந்த (TN 50 D 2896) என்ற வாகனம் பதிவெண் கொண்ட இனோவா காரை வழிமறித்து மடக்கியுள்ளனர்.
இதனால் காரில் இருந்த 2 பேர் போலீசாரைக் கண்டவுடன் காரை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சித்துள்ளனர். இதையடுத்து இருவரையும் பிடித்து காரை போலீசார் சோதனை செய்ததில், காரில் இலங்கைக்கு கடத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்ட 540 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் காருடன் 540 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுமட்டுமின்றி, கடத்திச்சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் மகன் சிவராஜ் மற்றும் சென்னையைச் சேர்ந்த சேதுபாண்டி என்பவரின் மகன் தர்மேந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து சூரங்குடி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.